சென்னை,
கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடந்த 14ந்தேதியுடன் முடிவுக்கு வந்தது. எனினும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு அடுத்த 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதன்படி மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஆனால், தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் 76 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 18 பேர் பலியாகி உள்ளனர். 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமுடன் பணியாற்றி வருகிறது. இதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளது.
எனினும், சில பகுதிகளில் பொதுமக்களில் பலர் ஊரடங்கை மீறி வருகின்றனர். வாகனங்களில் தேவையின்றி செல்கின்றனர். கைது நடவடிக்கை தொடருகிறது. வழக்குகள் பதிவாகின்றன. சமூக இடைவெளி மீறப்படுகிறது.
இதுபற்றி த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கூறும்பொழுது, வரும் 26ந்தேதி மற்றும் மே 3ந்தேதி ஆகிய இரு நாட்கள் (ஞாயிற்று கிழமை) சென்னையில் முழு அடைப்பு அறிவிக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள், மருந்து கடைகளை தவிர பிற கடைகள் மூடப்பட வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இதற்கான அறிவிப்பை தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.