சென்னை,
அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. கொரோனா சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும், சுங்க கட்டண வரி உயர்வும் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளின் மீது மேலும் பெரும் சுமையை ஏற்றும் செயல்.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்கள் அடையும் வேதனையை போக்குவதற்கு வழிவகை செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என அரசு தன் நிதி நெருக்கடியை மக்கள் மீது திணித்து அவர்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, சுங்கக் கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக திரும்பப்பெறவேண்டும். மத்திய அரசு அதனை உறுதிசெய்வதுடன், மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.