தமிழக செய்திகள்

மண்வெட்டியால் அடித்து தொழிலாளி கொல

கீழ்பென்னாத்தூர் அருகே மண்வெட்டியால் வெட்டியதில் மண்பாண்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே மண்வெட்டியால் வெட்டியதில் மண்பாண்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மண்பாண்ட தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கொளத்தூர் கிராமம் காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 51), மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சுசிலா. இவர்களுக்கு தமிழழகன் (17), கோபிநாத் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவரது எதிர் வீட்டில் வசித்து வருபவர் வடிவேல். இவரது மனைவி சாந்தி (42), இவர்களின் மகன்கள் வேடி (19), சந்தோஷ் (17).

வேலுசாமி, வடிவேல் ஆகிய 2 பேரின் குடும்பத்தினரிடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வெட்டி கொலை

இந்த நிலையில் இன்று பகல் 2.15 மணியளவில் இருவரது குடும்பத்தினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது சாந்தி மற்றும் மகன்கள் வேடி, சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து மண்வெட்டியால் வேலுசாமியின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் சாந்திக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தகராறை தடுக்க வந்த வேலுசாமியின் மனைவி சுசிலா, தாய் நல்லம்மா (75) ஆகியோரையும் தாக்கியதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.