சென்னை,
இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் எல்.பி.ஜி. விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த எல்.பி.ஜி விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.