சென்னை,
தமிழ் மொழியில் பிறமொழி கலப்பின்றி எழுதியும், வெளியிடப்பட்டும் வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் மாத இதழுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது வழங்கப்படுகிறது. இதற்கு வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும், வெளியிடப்பட்டும் வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் மாத இதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழை தேர்வு செய்து தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விருது ஒவ்வொன்றிற்கும் விருது தொகையாக ரூ.1 லட்சமும், கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும். 2021-ம் ஆண்டிற்கு இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப்படிவம், விண்ணப்பத்திற்கான வரையறைகளை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் நாளிதழ், வாரஇதழ், மாத இதழ், தொடங்கிய ஆண்டு, ஆற்றிய பணிகள், செய்த சாதனைகள், தற்போது ஆற்றிவரும் பணிகள், ஏற்கனவே பெற்ற பாராட்டு விவரங்கள் ஆகியவற்றை தொகுத்து முழு விவரங்களுடன், தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல்தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008' என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413 என்ற தொலைபேசி எண்களையும், tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.