மயிலாடுதுறை அருகே தொகுப்பு வீட்டின் மற்கூரை இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதில் முதியவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தொகுப்பு வீடு
மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, கன்னிதோப்பு தெரு ஆகிய இடங்களில் உள்ள 75 தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கன்னித்தோப்பு தெருவில் சுப்பையன் (வயது 75) என்பவருடைய தொகுப்பு வீட்டின் வீட்டின் மேற்கூரை சம்பவத்தன்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்கு பின்புறம் உள்ள கொட்டகையில் அவர் படுத்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபோன்று மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் மிகுந்த சேதத்திற்குள்ளாகி ஆபத்தான நிலையில் உள்ளது.
இடிந்து விழும் நிலையில்...
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன. எனவே சேதம் அடைந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்றும், விபத்து ஏற்படும் முன் தமிழக அரசு வீடுகளை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாப்படுகை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பல்வேறு பகுதிகள் மிகவும் ஏழ்மையான மக்கள் வசிக்கும் காலனி பகுதிகளாக உள்ளன. மேற்கூரைகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
புதிய வீடுகள்
பலத்த மழை பெய்யும் போது இந்த வீடுகளில் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்தும், மேற்கூரைகள் இடிந்து விழுந்தும் வருகின்றன. இதனால் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு காயங்கள் ஏற்படுகின்றன. மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை மூடியும், வீடுகள் சேதமடைந்து மேற்கூரை பெயர்ந்து விழுவதால் வாசலில் கீற்று கொட்டகை அமைத்தும் பொதுமக்கள் அதில் வசித்து வருகின்றனர்.
கன மழை பெய்யும்போது உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடனே மக்கள் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். எனவே பழுதடைந்த தொகுப்பு வீடுகளை கணக்கெடுத்து, அதில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் வசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்தி புதிய வீடுகளைகட்டித் தர வேண்டும்' என்றனர்.