பள்ளி மாணவர்கள்
குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள சேக்கிழார் அரசு பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் அரசு பஸ்சில் சென்று வருகின்றனர்.
அப்போது கல்லூரி மாணவர்கள் போன்று பள்ளி மாணவர்களும் 'ரூட்டு தல' பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தாங்கியபடியும், ஓடும் பஸ்சில் ஜன்னலில் நின்று மேற்கூரையை பிடித்தபடியும், படிக்கட்டில் தொங்கியபடி தரையில் கால்களை உரசியும், சில நேரங்களில் பஸ்சின் மேற்கூரையில் ஏறி நின்றும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
கண்காணிக்க வேண்டும்
தரையில் கால்களை உரசி செல்லும்போது சாலையில் புழுதி பறப்பதால் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் சில நேரங்களில் மாணவர்கள் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. மாணவர்களின் இந்த செயலை சாலையில் செல்லும் பொதுமக்கள் கண்டித்தும் கேட்காமல் தொடர்ந்து இதேபோல் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் பள்ளி மாணவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.