தமிழக செய்திகள்

தர்மபுரியில் பேரீச்சை அறுவடை தொடக்கம்

பேரீச்சை ரகத்துக்கு ஏற்றார் போல் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தர்மபுரி,

பாலைவன நாடுகளில் மட்டுமே அதிகமாக பயிரிடப்பட்டு வந்த பேரீச்சை மரம், தற்போது தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, மொரப்பூர், கம்பைநல்லூர், அரியகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரீச்சை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த பகுதிகளின் காலநிலை பேரீச்சை சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதால், பல விவசாயிகள் இந்த பேரீச்சை மரத்தை விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகின்றனர்.

32-க்கும் பேரீச்சை ரகங்கள்

தர்மபுரி மாவட்டத்தின் அரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயி எஸ். நிஜாமுத்தீன் மத்திய கிழக்கு நாடுகளில் கற்ற அனுபவத்தை பயன்படுத்தி 32-க்கும் மேற்பட்ட பேரீச்சை ரகங்களை வெற்றிகரமாக பயிரிட்டு வருகிறார்.

பேரீச்சை பழங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உலகத்தில் உள்ளன. அதில், அஜ்வால், பர்ரி உள்ளிட்ட பேரீச்சை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

ஜூன் மாதம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பேரிச்சை அறுவடை தொடங்கும். இந்த ஆண்டு தாமதமாக அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட பேரிச்சை பழங்களை வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் பேரீச்சை பழங்களை வாங்கி செல்கின்றனர்.

ஏற்றுமதி செய்கின்றனர்

அறுவடை செய்யப்பட்ட பேரீச்சை பழங்களை பண்ணைக்கு வந்து உள்ளூர் சிறு வியாபாரிகள், சில்லரை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வெளிநாட்டிற்கு பழங்களை வாங்கி ஏற்றுமதி செய்கின்றனர். பேரீச்சை ரகத்துக்கு ஏற்றார் போல் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.