தொண்டி,
திருவாடானை தாலுகா ஆண்டாவூருணி அருகே உள்ள பாகனூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு தனியாக மயானம் உள்ளது. இதனால் வரை இவர்கள் மயானத்திற்கு செல்வதற்கான சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் நேரில் வலியுறுத்தியும் சாலை அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று இறந்த சுரேஷ் என்பவரின் உடலை இந்தபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களின் வழியாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருண் கூறியதாவது:- எங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து எங்களுக்கான மயானத்திற்கு சுமார் 800 மீட்டர் தூரத்தை கடந்து செல்ல வேண்டும். ஆனால் சாலை வசதி இதுவரை செய்து கொடுக்கப்படாததால் விவசாய காலங்களில் நெற்பயிர்களுக்கு நடுவிலே தான் சடலத்தை தூக்கிச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவலநிலை இருந்து வருகிறது. எங்கள் கோரிக்கை இதனால் வரை நிறைவேற்றப்படவில்லை என்பது மிகுந்த வேதனையாக இருந்து வருகிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.