பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு கால்வாயில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தொழிலாளி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிபட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு நந்தினி (32) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சண்முகம் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து நந்தினி அவருடைய உறவினர் வினோத் என்பவரிடம் தனது கணவர் குறித்து கேட்டார். அதற்கு வெங்கடசமுத்திரம் அருகே ஏரிக்கு செல்லும் வாணியாறு கால்வாயில் உள்ள தோட்டத்தில் தானும், சண்முகமும் மது குடித்ததாகவும், போதை அதிகமானதால் சண்முகம் அங்கேயே படுத்துவிட்டதாகவும் கூறினார்.
மர்மசாவு
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது சண்முகம் அங்கு இல்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி- தர்மபுரி மெயின் ரோட்டில் வெங்கடசமுத்திரம் ஏரிக்கு செல்லும் வாணியாறு கால்வாய் பாலத்திற்கு அடியில் சண்முகம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நந்தினி கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளி மர்மசாவு குறித்து போலீசார் தாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.