தமிழக செய்திகள்

அருண் ஜெட்லி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜ.க.வின் எம்.பி.யுமான அருண் ஜெட்லி திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் ஜெ.பி. என்று இன்றளவும் அழைக்கப்படும் மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி, நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜெட்லி ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல, நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவர்.

தலைவர் கருணாநிதி மீது பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அருண் ஜெட்லி, மூத்த வக்கீலாக ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர் என்பது மட்டுமின்றி, நீதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறை சீர்திருத்தங்களுக்காக பாடுபட்டவர்.

பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், நாடாளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பா.ஜ.க.வுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும், சக வக்கீல்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ஜ.க.வின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த அருண் ஜெட்லி சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலாகவும் சேவையினை நல்கியுள்ளார்.

அவரது மறைவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவு பா.ஜ.க.வுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், மத்திய சட்டம், நிதி, செய்தி ஒலிபரப்பு ஆகிய துறைகளின் முன்னாள் மந்திரியுமான அருண் ஜெட்லி இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார்-உறவினர்களுக்கு, ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழிசை: பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

அருண் ஜெட்லி காலமாகிவிட்டார் என்ற செய்தி மனதிற்கு மிகுந்த வருத்தத்தையும், வலியையும் தருகிறது. உடல் நலம் சரியில்லாத போதுகூட சரியான தகவல்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று டுவிட் செய்துவிட்டு சென்றவர், இன்று நம்மிடம் இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

அவரின் மறைவு கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு. நாம் மக்களுக்காக சேவை செய்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஜயகாந்த்: இதேபோல், அமைச்சர் டி.ஜெயக்குமார், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சு.திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்