சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அச்சங்குளத்தில் நேற்று முன்தினம் மதியம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 17 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
மேலும் ஒரு விபத்து
இந்த நிலையில் நேற்று சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்தில் ராஜூ என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
பலத்த சேதம்
இந்தநிலையில் ஒரு அறையில் பட்டாசு தயாரிக்க வேதிப் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு தொழிலாளர்கள் அறையின் வெளியே நின்று இருந்தனர். அப்போது திடீரென வேதிப்பொருட்கள் ரசாயன மாற்றம் ஏற்பட்டு திடீரென வெடிக்க தொடங்கின. அப்போது அந்த அறை பலத்த சேதம் அடைந்தது.
அறையின் வெளியே நின்று கொண்டிருந்த பட்டாசு தொழிலாளி பூலாவூரணியை சேர்ந்த மனோகரன் மகன் சுரேஷ் (வயது 30) என்பவர் லேசான காயம் அடைந்தார். அவரை மீட்டு முதல் உதவி அளித்தனர்.
அதிகாரிகள் அதிர்ச்சி
சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பட்டாசு ஆலையில் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்ட மறுநாளில் மீண்டும் மற்றொரு ஆலையில் விபத்து ஏற்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.