தமிழக செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழையால் பாதிப்பு 5 லட்சம் தார்ப்பாய்கள் புயலில் சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு வழங்குகிறது

‘கஜா’ புயலில் சேதம் அடைந்த வீடுகளுக்கு தற்காலிகமாக கூரை அமைக்க 5 லட்சம் ‘தார்ப்பாய்’களை இலவசமாக வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டன.

சென்னை,

தமிழகத்தை கடந்த வாரம் தாக்கிய கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் புயலினால் பேரழிவு ஏற்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

புயலின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ஏராளமான குடிசைகள் இடிந்து நாசமாயின. குடிசை வீடுகள் மட்டும் அல்லாமல், காரை வீடுகளின் மீது வேயப்பட்டு இருந்த ஓடுகளும் தூக்கி வீசப்பட்டு நாசமாயின.

இதனால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். வானமே கூரையாக காட்சி அளிக்கும் வீடுகளில் பலர் தங்கி இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நிவாரண முகாம்களிலும், வீதிகளிலும், சாலைகளிலும் தங்கி இருக்கிறார்கள். சாலைகளில் தங்கி இருப்பவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுகிறார்கள்.

நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. அரசு தரப்பில் இருந்து மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். இருந்தபோதிலும் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் சரிவர கிடைக்கவில்லை.

புயல் தாக்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவுக்கும், குடிநீருக்கும் உதவியை எதிர்பார்த்து மக்கள் காத்து இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புயலால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவசமாக தார்ப்பாய்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 16-ந் தேதி அதிகாலை அதிதீவிர கஜா புயல் நாகை மாவட்டத்தில் கரையை கடந்தது. இந்த அதிதீவிர புயலினால் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, பெருமளவு உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டது. எனினும், புயலின் கடுமையான தாக்கத்தால் வீடுகள், பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மிக அதிக அளவில் சேதம் அடைந்தன.

கஜா புயல் கரையை கடப்பதற்கு முன்பும், கடந்த பின்னரும், பல்வேறு நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டோர் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, பாய், போர்வை போன்ற வசதிகளும், சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

கஜா புயல் மற்றும் கன மழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதம் அடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், பகுதியாக சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 100 வழங்க நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதிதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும் எனவும் நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்து உள்ளன. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையில் இருந்து வீடுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கூரை மேல் தற்காலிகமாக போடுவதற்கு தார்ப்பாய் ஷீட்டுகள் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு, கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்துக்கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வாங்கி, உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, புயலில் சேதம் அடைந்த வீடுகளுக்கு 5 லட்சம் தார்ப்பாய்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு மீண்டும் கனமழை பெய்தது. நேற்றும் அந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, குடவாசல் உள்ளிட்ட இடங்களில் இடைவிடாமல் மழை பெய்தது.

இதனால் அந்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டன. உரிய இடங்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு போய்ச் சேர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு