சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 32 ஆயிரத்து 894 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் ரேஷன் கடைகள் மூலமாக தகுதியுள்ள அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் ஒருசில பணியாளர் சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உண்மைக்கு புறம்பான செய்திகளை நாளிதழ்களுக்கு கொடுத்து தவறான செய்திகளை பொதுமக்கள் மத்தியில் பரப்ப முயற்சித்து வருகின்றது.
மொத்தமுள்ள 32 ஆயிரத்து 894 ரேஷன் கடைகளில், 3.4 சதவீத கடைகளின் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வராமல் உள்ளனர். இதற்கும் மாற்று ஏற்பாடுகள் செய்து மக்களுக்கு உரிய காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி வினியோகம் செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்று(அதாவது நேற்று முன்தினம்) 7 சதவீத பணியாளர்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் 5 சதவீத கடைகள் மட்டுமே பாதிக்கப்பட்டது. அதற்கும் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) 3.4 சதவீத பணியாளர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றனர்.
ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையை பரிவுடன் அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், அரசாணை எண் (டி) 169, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 17.09.2018-ன்படி குழு அமைக்க அனுமதித்து ஆணையிட்டது. அதன்படி கூடுதல் பதிவாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, பல்வேறு பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் அக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பணியாளர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, துறைக்கும், அரசுக்கும் ஒத்துழைக்க வேண்டும். மேலும், ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடாமல், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.