அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச சீருடை தைப்பதற்கான கூலியை ஆண்டுதோறும் 5 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்டப் பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை தைப்பதற்கான கூலியை ஆண்டுதோறும் 5 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளிச் சீருடைகளை பஸ்சில் எடுத்துச் செல்லும்போது லக்கேஜ் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். சீருடை தைக்கும் பெண்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு பெண் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி 60 வயது நிறைவில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியப் பயன்களைத் தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாநில செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.