சேலம்,
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு கொசுவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி அதிகாரிகளுடன் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள எல்.ஆர்.என். பஸ் நிறுவனத்தின் பணிமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு விபத்தில் சிக்கிய மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், கார்கள், மோட்டார்சைக்கிள்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஆய்வின் போது, இந்த வாகனங்கள் மற்றும் இதை மூடிவைக்க பயன்படும் தார்பாய்களில் தேங்கியிருந்த மழைநீரில் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடனே பஸ் நிறுவன நிர்வாகியை அழைத்து கலெக்டர் ரோகிணி கண்டித்தார். மேலும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து குறைபாடுகளையும் சரி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் இந்த பணிமனையில் ஆய்வு மேற்கொள்வார்கள். அதற்குள் டெங்கு தடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகியிடம் கலெக்டர் கூறினார். மேலும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளாததால் எல்.ஆர்.என். பஸ் நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் ரோகிணி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.