தமிழக செய்திகள்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: காங்கிரசில் இருந்து மாநில பொதுச்செயலாளர் விலகல்

சிவகங்கை தொகுதியை திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒதுக்குவதாக அறிவித்தனர்.

சென்னை,

சிவகங்கை அருகே உள்ள பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சி.ஆர்.சுந்தர்ராஜன். இவருடைய குடும்பத்தினர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தனர். இவர் தொழில் அதிபராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்த முறை தனது சொந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பினார். அதற்கான வேலைகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்தார். எனவே இந்த முறை சிவகங்கை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் சிவகங்கை தொகுதியை தி.மு.க. கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒதுக்குவதாக அறிவித்தனர். இதனால் சி.ஆர்.சுந்தர்ராஜனின் ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே அவருக்கு மேலூர் தொகுதி வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதினர். ஆனால் மேலூர் தொகுதியும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பதாகவும் கூறினார்.