திருச்சி,
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. மீட்புக்குழுவினர், குழந்தையை மீட்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடுக்காட்டிப்பட்டியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட வந்தார். துணை முதலமைச்சருடன் அவரது மகனும் தேனி மக்களவைத் தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்தரநாத் குமார் வந்தார். துணை முதலமைச்சருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகள் குறித்த விளக்கத்தை அளித்தனர். அத்துடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குழந்தையின் பெற்றொருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூடப்படும் என்றார்.