சென்னை,
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல், இந்த ஆண்டு ஜனவரி வரை நடந்த கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக, மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி வரை 1 மாதம் கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும். இது ஆபரேஷன் கஞ்சா வேட்டை-2 என்று அழைக்கப்படும். கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை தொடர்ந்து விற்பவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி, அவர்களை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். பள்ளி-கல்லூரிக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு, வாட்ஸ்-அப் குழு ஒன்றை அமைத்து, அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை பற்றி, காவல்நிலைய ஆய்வாளர்கள் ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும்.
ஆந்திராவில் கஞ்சாவை ஒழிக்க...
ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயிர்களை ஒழிக்க, ஆந்திர மாநில போலீசாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பு போலீசார் இதை முன்னின்று செய்ய வேண்டும். ரெயில்வே போலீசார் விழிப்போடு செயல்பட்டு, ரெயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் நிலைய உளவுப்பிரிவு தலைமை காவலர்களிடம் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் விற்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். பார்சல் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை மருந்து விற்பவர்களை தனிப்படை அமைத்து கண்காணித்து, கைது செய்ய வேண்டும்.
தினமும் அறிக்கை
மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தினமும் இந்த பணியினை கண்காணித்து மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் அறிக்கையை தினமும் அனுப்ப வேண்டும். சென்னை, தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர்களும் நேரடியாக இந்த பணியில் கவனம் செலுத்தி உரிய அறிக்கையை அனுப்புதல் வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.