சென்னை,
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த ஜே.கே.திரிபாதி இன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு காவல்துறை மரியாதையுடன் வழியனுப்பு விழா நடைபெற்றது. தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு டிஜிபியாக பதவி வகித்துவந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக் காலம், இன்றுடன் (ஜூன் 30) முடிவடைகிறது.
இதனையடுத்து இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் முறைப்படி அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் டிஜிபி திரிபாதி பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் புதிதாக டிஜிபியாக தேர்வு செய்யப்பட்ட சைலேந்திர பாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமரவைத்து, காவல்துறை அதிகாரிகள் காரை தேர் போல கயிறு கட்டி இழுத்து, காருக்கு முன்பாக மலர்களைத் தூவி, பாரம்பரிய முறைப்படி காவல்துறை மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர்.