தர்மபுரி,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வந்த வீரன்(40) தனது மனைவி உமா மற்றும் மகள் சுஷ்மிதா(13) ஆகியோருடன் தனது சொந்த ஊரான மேட்டூருக்கு சென்றுவிட்டு மீண்டும் பெங்களூரு நோக்கி பொலிரோ காரில் சென்றுக்கொண்டிருந்தார். இன்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு அருந்த காரை நிறுத்தியுள்ளனர்.
கார் நின்ற பிறகு உமா காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர், பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கண் இமைக்கும் நேரத்தில் வீரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக சென்று சாலையோரத்தில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் வீரன் மற்றும் அவரது மகள் சுஷ்மிதா ஆகியோர் காருக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
உமாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து தர்மபுரி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் வீரன் மற்றும் குழந்தை சுஷ்மிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள் விழுந்த கார் வெளியே எடுக்கப்பட்டது. காரின் உள்ளே சிக்கிகொண்ட தந்தை (வீரன்) மற்றும் மகள் (சுஷ்மிதா) இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். மேலும் கிணற்றில் கார் கவிழ்ந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றுக்குள் கார் பாய்ந்து தந்தை மகள் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.