தமிழக செய்திகள்

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் அறிக்கை தாக்கல் தந்தை தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து ஐகோர்ட்டு உத்தரவு

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இளவரசனின் தந்தை தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மர்ம மரணம்

தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணும் காதலித்தனர். இதற்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. நத்தம் காலனி, அண்ணாநகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடு சேதப்படுத்தப்பட்டன. இதைதொடர்ந்து, இளவரசனை பிரிந்து, திவ்யா தன் அம்மாவுடன் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், 2013-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இளவரசனின் மர்ம மரணம் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றக்கோரி இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இளவரசனின் உடலை உடற்கூராய்வு செய்த டாக்டர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எனவே இதில் சந்தேகம் உள்ளதால் இந்த வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கின், அறிக்கை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

தற்கொலை

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.சி.ஐ.டி, போலீசார் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், மூன்று மருத்துவ குழுக்களால் நடத்தப்பட்ட இளவரசனின் பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் இளவரசன் உடல் அருகே கிடந்த தற்கொலை கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் புலன் விசாரணை நடத்தினோம். அதில் இளவரசனின் மர்ம மரணம் தற்கொலை என்று தெரிய வருகிறது என்று கூறப்பட்டிருந்தது.

போலீசாரின் அறிக்கைக்கு மனுதாரர் இளங்கோ தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், போலீசாரின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.