தமிழக செய்திகள்

“மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை; ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

“மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை. ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வழியாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆட்சியின் சாதனை எதையும் சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் பேசியிருக்கிறார். அ.தி.மு.க.வை உடைக்க நானோ தி.மு.க.வோ நினைக்கவில்லை, அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்களே தவிர, அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு சொல்ல விரும்புகிறேன்.

அ.தி.மு.க.வின் 4 ஆண்டுகால முதல்-அமைச்சராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ தி.மு.க.வோ கருதவில்லை. நான் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளே, குறிப்பாக பா.ஜ.க.வே சொல்லவில்லை. இன்னும் சொன்னால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று ஓ.பன்னீர்செல்வமே பிரசாரம் செய்யவில்லை. இந்த சோகத்தை மறைக்க, இந்த வெட்கத்தை மறைக்க, தி.மு.க. மீதும் என் மீதும் பழி போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க.வை குடும்பக்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

ஏழைகளுக்கு கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு ரூ.2,500 தரவில்லை; தேர்தலுக்காகக் கொடுக்கிறார். அரசு பணத்தை அ.தி.மு.க. நலனுக்காக கொடுக்கிறார். அ.தி.மு.க. டோக்கன் கொடுத்து அவர்தான் மாட்டிக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டு இருந்தாரா என்று கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்குச் சொல்கிறேன். நான் தூங்க மாட்டேன். நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்பது விழித்திருப்பவர்களுக்குத்தான் தெரியுமே தவிர, தூங்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் வரை தூக்கம் இல்லை.

தமிழகத்துக்குத் துயரமான ஆட்சி இது. இந்தத் துயரம் களையப்பட வேண்டும். தமிழகத்துக்குத் துக்கமான ஆட்சி இது. இந்த துக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தமிழகத்துக்குக் களங்கமான ஆட்சி இது. இந்தக் களங்கம் நீக்கப்பட வேண்டும். தமிழகத்துக்குக் கறை படிந்த ஆட்சி இது. இந்தக் கறை கழுவப்பட வேண்டும். தமிழகத்தை சீரழித்த ஆட்சி இது. இது சீர்செய்யப்பட வேண்டும். தமிழகத்தை வஞ்சித்த ஆட்சி இது. இந்த வஞ்சகம், நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்துக்கு துரோகம் செய்த ஆட்சி இது. அத்தகைய துரோகிகள் துரத்தப்பட வேண்டும். இது ஒரு இருண்ட காலம். அது இன்றோடு முடியவேண்டும்.

இன்று (நேற்று) 2020-ம் ஆண்டின் இறுதிநாள். நாளை (இன்று) 2021 புத்தாண்டு பிறக்கும்போது அது தமிழகத்துக்கு புதிய விடியலைத் தரும் நாளாக விடியட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்