மதுரை,
புதிய அமைப்பின் பெயர் மற்றும் கொடியினை மேலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அறிவிப்பேன் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.
மதுரை மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள திடலில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வந்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக மேலூரில் முகாமிட்டு கூட்ட ஏற்பாடுகளை கவனித்தனர். மதுரையில் இருந்து மேலூர் செல்லும் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் புறவழிச்சாலைகளில் டி.டி.வி.தினகரனை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்கள், தோரணங்கள் வைக்கப்பட் டுள்ளன.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே மேலூரில் குவிந்தனர். இதனால் மேலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பொதுக்கூட்ட திடலில் கோட்டை வடிவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரது முழுஉருவ பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணி அளவில் டி.டி.வி.தினகரன் கார் மூலம் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்புக்கு பின்னர் மேடைக்கு வந்த டி.டி.வி.தினகரன் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேடை முன்பு அமைக்கப் பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார். கருப்பு,வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் டிடிவி தினகரன்.
முன்னதாக மேலூர் விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி தினகரன் மரியாதை செலுத்தினார்.