தமிழக செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் கொட்டியக்காரன்வலசை பகுதி அருந்ததியர் காலனியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர். தினந்தோறும் வெகு தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்புல்லாணி.

சேதமடைந்த அலுவலக கட்டிடம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சி அலுவலகம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எனவே அலுவலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்மேகம், திருப்புல்லாணி.

பாதாள சாக்கடையில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவுநீரில் நடப்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரில் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்ராகிம், ராமநாதபுரம்.

மின்நுகர்வோர் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு உட்பட்ட காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தும் இடத்தில் குறைந்த பணியாட்களே உள்ளனர். இதனால் இங்கு வருவோர் நீண்ட நேரம் காத்திருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் ஆட்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

சீரான குடிநீர் வினியோகிக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி சிலர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இதனால் முறையாக அனுமதி பெற்று குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே அனுமதி பெறாதவர்கள் தகுந்த அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக சீரான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பரமக்குடி.