தமிழக செய்திகள்

'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம்

திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பை போற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.

சென்னை,

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி "இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பாராதிராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா மறைவு:

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் பாரதிராஜா (வயது 84) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முதல்-அமைச்சர், திரையுலகினர் அஞ்சலி:

சென்னையில் நேற்று காலையில் மரணம் அடைந்த இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கும், ராதிகா உள்ளிட்டோருக்கும் அவர் ஆறுதல் கூறினார். மேலும் 'திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பை போற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்' என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், ராஜ்மோகன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், விஜயகுமார், ராதாரவி, இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தேனியில் இன்று உடல் அடக்கம்:

பாரதிராஜாவின் உடல் அடக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறும்போது, "பாரதிராஜாவின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என்று பாரதிராஜாவின் குடும்பத்தார் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல பாரதிராஜாவின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி” என்றார்.

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், இன்று (வியாழக்கிழமை) படப்பிடிப்பு முழுவதும் நிறுத்தப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.