தமிழக செய்திகள்

டைரக்டர் முருகதாசை கைது செய்ய தடை ஐகோர்ட்டு உத்தரவு

‘சர்கார்’ படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை வருகிற 27-ந் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர்கள் விஜய், ராதாரவி, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இந்த திரைப்படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக சாடியும், தமிழக அரசையும், தமிழக அரசின் இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக கூறி திரையரங்குகள் முன்பாக அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர்.

டைரக்டர் முருகதாஸ் முன்ஜாமீன் மனு

இதற்கிடையில், சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட சிலர் மீது குற்றம் சாட்டி சென்னை போலீஸ் கமிஷனரிடம், தேவராஜன் என்பவர் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரை, விசாரணைக்காக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு, போலீஸ் கமிஷனர் அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் திடீரென வந்து கதவை தட்டியதால், தன்னை அவர்கள் கைது செய்யக்கூடும்; அதனால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவசர விசாரணை

மேலும் அந்த மனுவில், சர்கார் படத்திற்கு மத்திய அரசு தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. முறையான அனுமதியுடன் வெளியான சர்கார் படத்துக்கு எதிராக ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்துவதே சட்டவிரோதமாகும். தற்போதைய சூழலில் நிலவும் பிரச்சினைகளை சித்தரித்துத்தான் அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் பொதுமக்கள் யாரும் அரசுக்கு எதிராக சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று பிற்பகலில் அவசர மனுவாக விசாரித்தார். அப்போது கூடுதல் அரசு வக்கீல் எம்.பிரபாவதி ஆஜராகி, தேவராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தவே, அந்த புகார் மனு விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுவரை முருகதாஸ் மீது வழக்கு எதுவும் பதியவில்லை என்றார்.

எதிர்மறையான விமர்சனம்

அதற்கு நீதிபதி, இந்த திரைப்படத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், சர்கார் படத்தில் அரசு வழங்கும் இலவச கிரைண்டர், மிக்சிகளை சாலையில் போட்டு உடைத்து, தீ வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த காட்சியில் இந்த இலவச பொருட்களை உடைப்பதுபோல படத்தின் இயக்குனர் முருகதாசே நடித்துள்ளார். மேலும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, கோமளவள்ளி என்று குறிப்பிட்டு எதிர்மறையான விமர்சனங்களை செய்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றார்.

காட்சிகள் நீக்கம்

இதையடுத்து நீதிபதி, அந்த திரைப்படத்தில் மிக்சி, கிரைண்டர்களை மட்டும்தான் உடைக்கின்றனரா? அல்லது (தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட) இலவச கலர் டி.வி.க்களையும் உடைக்கின்றனரா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு வக்கீல், அப்படி இருந்தால் கூட நடுநிலையான விமர்சனமாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், ஆளும் கட்சியை குறிவைத்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது என்றார். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது என கூறினார்.

கைது கூடாது

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் ஏ.ஆர்.முருகதாசை வருகிற 27-ந் தேதி வரை போலீசார் கைது செய்யக்கூடாது. அதற்குள், அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணையை போலீசார் முடிக்க வேண்டும். அந்த விசாரணைக்கு முருகதாஸ் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர், வழக்கின் விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு