தமிழக செய்திகள்

சிவகளை அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுப்பு

சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

தூத்துக்குடி,

கொரோனா பரவல் குறைந்ததால் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடந்து வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை, முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் சிவகளையில் 2 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் போது, ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. சிவகளையில் சிவகளை பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீமூலக்கரை ஆகிய மூன்று இடங்களில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் முதன் முறையாக 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் ஸ்ரீமூலக்கரை பகுதியில் நடந்த ஆய்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற கல்வட்டங்கள் ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் பத்துக்கு பத்து என்ற அளவில் ஒவ்வொரு கல்வட்டங்களும் அமைந்துள்ளன. மேலும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்ணார். தற்போது ஒரு கல்வட்டம் மட்டும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 7 முதுமக்கள் தாழிகள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. சிவகளை பகுதியில் நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் 29 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3 முதுமக்கள் தாழிகள் மட்டும் மூடியுடன் காணப்படுவதால் இவை அடுத்தகட்ட ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவீக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது