நெல்லை,
தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரீகம் பழமை வாய்ந்தது என்பதை உலகறிய செய்யும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டு, பணிகள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்றுப் படுகையில் துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் கடந்த 16-ந் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
பழங்கால பொருட்கள்
நேற்று முன்தினமும், நேற்றும் நம்பியாற்றின் நதிக்கரைப்பகுதியில் நடந்த அகழாய்வின்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய மண் ஓடுகள், குவளை, பாசி, மணிகள், வட்டக்கல் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பொருட்களை தனித்தனியாக பிரித்து தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல விருதுநகர் மாவட்டம் மேட்டுக்காடு பகுதியில் நடக்கும் அகழாய்வில் நேற்று, சங்கு வளையல் செய்ய பயன்படுத்திய கருவிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், காதணிகள், நெசவு தொழிலுக்கான தக்களி என்ற பொருள், மேலும் அரியவகை கல் மணிகள், சிவப்பு நிறத்தில் சூது பவளம், செவ்வந்தி கல், சுடுமண்ணால் செய்யப்பட்ட தட்டுகள் போன்ற பழங்கால அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.