எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் போதிய மழை இல்லாமல் பருத்திச் செடிகளில் நோய் தாக்கப்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் குறைந்ததால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான கெச்சிலாபுரம், புளியங்குளம், சிவஞானபுரம், விருசம்பட்டி, வேடப்பட்டி, மந்திக்குளம், குருவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தாண்டு விவசாயிகள் அதிக அளவில் மானவாரி பயிராக பருத்தியை சாகுபடி செய்திருந்தனர்.
ஆனால் போதிய மழையின்மை காரணமாக செடிகளில் நோய் தாக்கம் ஏற்பட்டு காய்ந்து வாடிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்தாண்டு பெருமளவில் விளைச்சல் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி விலையும் பாதியாக குறைந்ததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
விளைச்சல் குறைவு
இப்பகுதி விவசாயிகள் நிலத்திற்கு உழுது கூலி, பயிரிடுதல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு, களை எடுத்தல் போன்ற ஒரு ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்தும் களையெடுக்கும் வேலையாட்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விளைச்சல் குறைவு ஒருபுறமும், விலை குறைவு மறுபுறமும் என இப்பகுதி பருத்தி விவசாயிகளுக்கு சோதனையாக உள்ளது.
இதனால் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட பருத்திச் செடிகளை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பருத்தி சாகுபடி செய்து நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.