சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கடந்த மே மாதம் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கும் விதமாக ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி கடந்த மே மாதம் 7-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊழல், முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலும், துறை ரீதியான விசாரணையிலும் சிக்கிய அரசு ஊழியர்களுக்கும் இந்த பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையால் பயனடையும் இதுபோன்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு தரப்பில் மாநில அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 31-ந்தேதி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கவேண்டும். நிதி நிலையின் காரணமாக ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தியது பொதுவான நடவடிக்கைதான். இந்த நடவடிக்கையினால் ஊழல் குற்றச்சாட்டுகளிலும், துறை ரீதியான விசாரணைகளிலும் சிக்கிய அரசு ஊழியர்களை அரசு காப்பாற்றவில்லை. அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும். குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்களின் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தியதை எதிர்க்க முடியாது.
பொதுநலனுக்காகத்தான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார். இதுகுறித்து விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதில், இந்த வழக்கு தெளிவற்ற தன்மையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நீதிமன்றத்தில் நேரத்தை மனுதாரர் வீணடித்துள்ளார். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.