தமிழக செய்திகள்

கட்சியில் இருந்து நீக்கம் புகழேந்தி அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் 24-ந்தேதி ஆஜராக சம்மன்

கட்சியில் இருந்து நீக்கியதால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட இருவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளராக இருந்து வந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தார். அதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின்பு, டி.டி.வி.தினகரன் தொடங்கிய அ.ம.மு.க. கட்சியில் பொறுப்பு வகித்துவந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் அ.தி. மு.க.வில் ஐக்கியமானார்.

அதைத்தொடர்ந்து அ.தி. மு.க.வில் அவருக்கு செய்தித்தொடர்பாளர், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது குறித்து புகழேந்தி சில கருத்துகளை தெரிவித்தார்.

இதன்காரணமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில் நடந்துகொண்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 14.6.2021 அன்று உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல். ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் புகழேந்தி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முறையான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

என்னுடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவித்து இருப்பதன் மூலம் எனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் இருவரையும் அவதூறு சட்டப்பிரிவின்கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆலிசியா, இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 24-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு