கிருஷ்ணகிரி அவதானப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). செங்கல் சூளை உரிமையாளர். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு சிலர் காரை நிறுத்தி உள்ளனர். இதற்கு வெங்கடாசலம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஒருவர் திடீரென காரை வெங்கடாசலம் மீது ஏற்றினார். பின்னர் காரில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஏற்றிய நபர்கள் குறித்து வெங்கடாசலத்தின் வீட்டு அருகில் உள்ள ஓட்டல் கண்காணிப்பு கேமராவை பதிவை வைத்து கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஓசூரைச் சேர்ந்த அருண்குமார் (25), ஞானசேகர் (26) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை வாலிபர்கள் சிலர் விபத்து நடந்த ஓட்டல் முன்பு நின்று ஓட்டலை மூடக்கோரி தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு திரண்ட கிராம மக்கள் போலீசாரிடம், ஓட்டலுக்கு வரும் கார்கள் எங்கள் கிராமத்திற்குள் வரும் சாலையில் வரக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.