மோதிரம்-பணத்துடன் சென்றார்
பெரம்பலூர் மாவட்டம், புதுவேலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 54). இவர் பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் வெங்கடேசபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்து, ஒரு அடகு கடையில் வைத்திருந்த 2 பவுன் மோதிரத்தை ரூ.77 ஆயிரம் கட்டி திருப்பினார்.
பின்னர் தண்டபாணி அந்த மோதிரத்தையும், மீதமுள்ள ரூ.43 ஆயிரத்தையும் ஒரு கைப்பையில் வைத்து தனது மோட்டார் சைக்களில் முன்பக்க கவரில் வைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். வழியில் அவர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அரணாரை விலக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
கவனத்தை திசை திருப்பி...
இந்த நிலையில் அதே சாலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் தண்டபாணியிடம், அவரது பணம் கீழே விழுந்து கிடப்பாதாகவும், அதனை எடுக்குமாறும் கூறி அவரது கவனத்தை திசை திருப்பினர். பின்னர் 2 பேரும் தண்டபாணியின் மோட்டார் சைக்கிள் கவரில் இருந்த பணம், நகையை திருடிக்கொண்டு துறையூர் செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
அவர்களை பிடிப்பதற்காக தண்டபாணி தூரத்தி கொண்டு ஓடிய போது கால் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னர் தண்டபாணி இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.