சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி என்ற நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்பமனு வாங்குதல், நேர்காணல் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு இன்று விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு விநியோகம் தொடங்கி வருகிறது.
பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு ரூ. 15 ஆயிரம், தனித்தொகுதிக்கான விருப்பமனு ரூ. 10 ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை தேமுதிகவினர் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
12ம் தேதி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.