மணப்பாறை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து சிவிபி அறக்கட்டளை சார்பில் காது கேளாதவர்களுக்கு செவித்திறன் மிஷின்களை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
அதை தொடர்ந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அரசு இன்னும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டாலும் கறுப்பு புஞ்சை, மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளால் சிலர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
எனவே, கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை கண்காணிக்க அந்தந்த மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் தனி வார்டை தமிழக அரசு உடனே தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஆட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டதாகவும் அதேபோல் இப்போதும் நல்ல தரமான உணவு அரசு வழங்கிட வேண்டும் என்று கூறினார்.