நடப்பு கல்வியாண்டில் பள்ளி, வட்டார அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வேலூர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் முதல்கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமெழி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி தயாளன், உதவி திட்ட அதிகாரி மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரப்பிள்ளை வரவேற்றார்.
விழாவில் கவின்கலை, நாடகம், தனித்திறன் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, கணியம்பாடி, வேலுர், வேலுர் மாநகராட்சி ஆகிய 8 வட்டாரங்களை சேர்ந்த 984 மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கே.அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 9 தலைப்புகளில் இன்று (வெள்ளிகிழமை) 74 போட்டிகளும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு 9 தலைப்புகளில் 81 வகையான போட்டிகள் நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.