நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திங்கள்சந்தை பரையன்விளையை சேர்ந்த நித்யா (வயது25) தனது பச்சிளம் குழந்தை மற்றும் தாயாருடன் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. அதில் எனக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக என்னை விவகாரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இதனால் நான் எனது தாயாரின் பராமரிப்பில் தங்கியிருந்து வேலைக்கு சென்று குழந்தையுடன் வசித்து வந்தேன்.
இந்தநிலையில் பாலப்பள்ளம் பத்தரை காலனியை சேர்ந்த 29 வயதுடைய வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகினார். முதலில் நட்பாக பழகிய அவர் எனது குடும்ப பிரச்சினைகளை கேட்டறித்து ஆறுதலாக பேசினார். தொடர்ந்து என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறினார். மேலும் எனது பெண் குழந்தையை நல்ல முறையில் பார்த்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகள் கூறினார்.
அவரது வார்த்தைகளை நம்பி நான் அவரை 2-வது திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்தநிலையில் நான் கருவுற்ற இருந்தேன். வீட்டில் ஓய்வாக இருந்த நேரத்தில் அவரது செல்போனை சோதித்து பார்த்த போது மற்றொரு பெண்ணுடன் ரகசியமாக திருமணம் நடந்த புகைப்படங்களை பார்த்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தன. இதையடுத்து நான் கருகலைப்பு செய்தேன்.
மேலும் இதுகுறித்து இரணியல் போலீசாரிடம் புகார் கொடுத்தேன். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது முதல்மனைவியை விவகாரத்து செய்து விட்டு என்னுடன் சேர்ந்த வாழ்வதாக கூறினார். மீண்டும் அவரது பேச்சை நம்பி அவருடன் வாழ்ந்து வந்தேன். இந்த நேரத்தில் எனது சம்பளம், நகை, மற்றும் வங்கி கடன் பெற்று பல தவணையாக ரூ.15 லட்சம் வரை கொடுத்தேன்.
இந்தநிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஒரு நாள் அவரது செல்போனை ஏதோர்ச்சையாக பார்த்த போது இன்ஸ்டாகிராம் மூலம் விவகாரத்தான பெண்களை டார்கெட்டாக வைத்து காதலாக பேசி வருவது தெரிய வந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவரது தாயாருடன் இணைந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி, தற்போது பிறந்த குழந்தை அவருக்கு பிறக்கவில்லை என கூறி வீட்டை விட்டு வெளியேற்றினர். எனவே, என்னைப்போல் பல பெண்களை ஏமாற்றி பணம் மோசடி செய்து வருபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.