சென்னை,
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவைக்குள் கொண்ட சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டமன்றத்துக்குள் கொண்டு சென்றதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க. தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, நோட்டீசுக்கு தடை பெற்றனர். இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு இறுதி விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற செயலாளர் ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.
உரிமைக்குழு சார்பில் தமிழக அரசின் சிறப்பு மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டு வருகிறார். இந்த வழக்கு 3-வது நாளாக நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் சிறப்பு மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி தொடர்ந்து வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதில் எந்த ஒரு காழ்புணர்ச்சியோ, உள்நோக்கமோ கிடையாது. நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டதே தவிர அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதற்கு முன்கூட்டியே அவர்கள் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளனர். மாற்று முறையில் தீர்வுகாண அவர்களுக்கு வழி உள்ளது.
மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டு வந்ததை மனுதாரர்கள் தரப்பு ஒப்புக்கொள்கிறது. எனவே, இவர்களது செயல் அவையின் உரிமை மீறலா? இல்லையா? என்பது முடிவு செய்ய வேண்டியதுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி முடிவு எடுக்க உரிமைக்குழுவுக்கு உத்தரவிட சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதிக் குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.