தமிழக செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போன்று 6 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முன்வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதை ஏற்கவில்லை. கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.

உயர்மட்டக்குழு கூட்டம்

இதன் காரணமாக, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் மட்டும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி இருந்து வந்தது.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. அதில், தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் இடங்களை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடையே நேற்று காலை 10.30 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

6 தொகுதிகள் ஒதுக்கீடு

இந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் சவுந்தரராஜன், பி.சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை முடிவில், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர்.

குறைவான தொகுதி

இதன்பின்பு அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது என்ற கோட்பாடு நிறைவேற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அதிக பலத்தோடு சட்டமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம்.

எங்களை பொறுத்தவரை 6 தொகுதிகள் என்பது குறைவானதுதான். அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை முறியடிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் ஏற்றுக்கொண்டோம். கூட்டணி உறுதியானதில் மகிழ்ச்சி. கேட்ட இடங்கள் கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

மேல்சபை எம்.பி.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற சிறு வாய்ப்பும் அளித்துவிடக்கூடாது என்கிற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக நின்று, தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தையின் போது, மேல்சபை எம்.பி. சீட் கேட்டீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இல்லை. நேரம் வரும்போது பேசுவோம்' என்று பதில் அளித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்