தமிழக செய்திகள்

அதிமுக அரசு நீடிப்பதை, ஆளுநர் அனுமதிப்பது விநோதமாக உள்ளது- ஸ்டாலின் பேட்டி

111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டும் உள்ள நிலையில் அதிமுக அரசு நீடிப்பதை, ஆளுநர் அனுமதிப்பது விநோதமாக உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #TNAssembly | #DMK

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையின், 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உரையாற்றினார். ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம், இந்த ஆட்சிக்கு 111 உறுப்பினர்கள்தான் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க முறையாக ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கிற உரையை அவர் படிப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் புரோகித், ஆய்வு பணி என்ற பெயரில் பல மாவட்டங்களுக்கு சென்று அந்த பணிகளில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் விரோதமாக அமைந்திருக்கிறது. அதை கைகட்டி, வாய் பொத்தி, இந்த மைனாரிட்டி ஆட்சியாக இருக்கிற இந்த குதிரை பேர ஆட்சி, வேடிக்கைப் பார்ப்பது மட்டுமல்ல, அதை வரவேற்று பாராட்டிக்கொண்டிருப்பது என்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்று. அதே நேரம் தமிழகத்தில் நிதிநிர்வாகம் முடங்கி போய் இருக்கிறது. தொழில் வளர்ச்சி கடைசி இடத்துக்கு சென்றிருக்கிறது.

அண்மையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து முதலமைச்சர் பேச்சுநடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் அவர்களை அழைத்து பேசவில்லை. இதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் வைத்துதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார். #TNAssembly | #DMK

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது