மறைவும், ராஜினாமாவும்...
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜானின் (அ.தி.மு.க.) பதவி காலம் 2025-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதியுடன் முடிகிறது. அவர் கடந்த மார்ச் 23-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே அது காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.வைச் சேர்ந்த வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
தேர்தல் அறிவிப்பு
வைத்திலிங்கத்தின் எம்.பி. பதவி காலம் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி முடிவடைவதாக இருந்தது. கே.பி.முனுசாமியின் பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி முடிவதாக இருந்தது. அவர்கள் ராஜினாமா செய்துவிட்டதால் இந்த 2 இடங்களும் தற்போது காலியிடங்களாக உள்ளன.இந்த நிலையில் முகமது ஜான் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை மட்டும் நிரப்புவதற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வாக்குப்பதிவு செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளின் பலம்
தற்போது தமிழக சட்டசபையில் காலி இடம் இல்லை. 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரு எம்.பி. காலியிடத்திற்கான இடைத்தேர்தல் என்பதால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கைக்கு (117) ஒன்று கூடுதலாக, அதாவது 118 எம்.எல்.ஏ.க்களின் வாக்கை வேட்பாளர் பெற வேண்டும். அவரே வெற்றி பெறுவார்.அந்த வகையில் தி.மு.க. வசம் தற்போது தனியாக 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தால் காங்கிரஸ்-18, விடுதலை சிறுத்தைகள்-4, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா -2 என 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.அ.தி.மு.க.விற்கு 66 எம்.எல்.ஏ.க்களும், கூட்டணி கட்சிகளான பா.ம.க.-5, பா.ஜ.க.-4 என 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தி.மு.க. வெற்றி
போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய 118 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு போதும் என்பதால், தி.மு.க. கூடுதல் வலிமையுடன் களம் இறங்குகிறது.எனவே தி.மு.க.வோ அல்லது கூட்டணி கட்சி தரப்பிலோ வேட்பாளர் நிறுத்தப்படுவார். அவரை எதிர்த்து வேட்புமனுக்களை வேறு கட்சியினர் தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
4 ஆண்டுகளுக்கு பதவி
ஒரு வேட்பாளரை முன்மொழிவதற்கு 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டும். எனவே சுயேச்சையாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்தாலும் எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வாய்ப்பில்லை. எனவே இந்த தேர்தலில் போட்டிக்கு வாய்ப்பில்லை. அதனால் வாக்குப்பதிவும் நடைபெறாது. வாக்குப்பதிவு நடைபெறாத சூழ்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான செப்டம்பர் 3-ந் தேதியன்றே, வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
வெற்றி பெறும் அந்த வேட்பாளர் 2025-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிப்பார்.