கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரசு அதிகாரியை காரை ஏற்றி கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் - டிடிவி தினகரன் கண்டனம்

ஆளுங்கட்சி எனும் பெயரில் திமுகவினர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் உதவி தொழில் ஆய்வாளர் சிவமூர்த்தி மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசனின் மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

எளிதில் பேசி தீர்க்க வேண்டிய வாகன நிறுத்தம் தொடர்பான சிறிய வாக்குவாதத்தை, வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கி, ஆளுங்கட்சி நிர்வாகியின் மகன் என்ற அதிகாரப்போக்கில் அரசு அதிகாரி என்றும் பாராமல் சிவமூர்த்தி மீது காரை ஏற்றி கொலை செய்திருப்பது தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்த பின்பும், திமுக நிர்வாகியின் மகன் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமலும், விசாரணையைத் தீவிரப்படுத்தாமலும் மெத்தனப்போக்குடன் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடுகளும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read:பள்ளி மாணவன் மீது சக மாணவர்கள் சாதி வெறியில் தாக்குதல்: என்ன விளக்கம் தரப்போகிறார் முதல்வர்? - எடப்பாடி பழனிசாமி

எனவே, உதவி தொழில் ஆய்வாளர் சிவமூர்த்தி அவர்களைக் கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இதே நேரத்தில், ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.