சென்னை,
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், தி.மு.க. 173. காங்கிரஸ் 25, ம.தி.மு.க. 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க-வும் புதிதாக இணைந்துள்ளன.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் தி.மு.க கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.