அதிர்ச்சி சம்பவம்: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் பலியான சோகம்

இரண்டு சிறுமிகள் தந்தையின் கண் முன்னே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சி சம்பவம்: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் பலியான சோகம்
Published on

ஏரல்,

தேனி மாவட்டத்தை சேர்ந்த சங்கரகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்துள்ளார். திருச்செந்தூர் செல்வதற்கு முன்பாக, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டு அங்கு சென்றனர்.

சாமி தரிசனம் முடித்த பின், சங்கரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) ஆகிய இருவரும் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றைக் கண்ட உற்சாகத்தில் சந்திரகுமாரின் மகள்களான அபிநயா, மீனாட்சி உள்பட 4 சிறுமிகள் ஆற்றின் ஆழமான பகுதியில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் 4 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

கரையில் நின்ற அபிநாயாவின் தந்தை சந்திரகுமார் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே தண்ணீரில் குதித்து 4 சிறுமிகளையும் மீட்க முயற்சி செய்தார்.

ஆனால் அவரும் சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கினார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் ஓடிவந்து 2 சிறுமிகளையும், சந்திரகுமாரையும் காப்பாற்றினார்.

ஆனால் அபிநயா மற்றும் மீனாட்சியை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏரல் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு அபிநயா மற்றும் மீனாட்சியை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

அப்போது ஒரு சிறுமியின் கண்களில் சிறிது அசைவு தெரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரையும் மீட்டு ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது 2 சிறுமிகளும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது இரண்டு மகள்களையும் பறிகொடுத்த பெற்றோரும், உறவினர்களும் ஆற்று மணலில் அமர்ந்து கதறி அழுதது பார்ப்போரை நிலைகுலைய செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com