சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அரசுப் பொறியியல் மற்றும் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை முறையே ரூ.25,000-லிருந்து ரூ.30,000 ஆகவும், ரூ.20,000-லிருந்து ரூ.25,000 ஆகவும் உயர்த்துவதாகத் திமுக அரசு பிறப்பித்துள்ள அரசாணை அப்பட்டமான ஏமாற்று வேலை.
கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை ரூ.57,700 ஆகப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நியமித்துள்ள நிலையில், அதில் பாதியைக் கூட தாண்டாதளவு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்ட திமுக அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முறையான ஊதிய உயர்வு கோரி போராடிக் கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களை வெறும் ரூ.5000-த்தை ஊதிய உயர்வாக விட்டெறிந்து அடக்கிவிடலாம் என்று நினைக்கிறாரா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?
பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்த தற்காலிக உதவிப் பேராசிரியர்களைக் கூண்டோடு பணிநீக்கம் செய்ததோடு, தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களையும் உதாசீனப்படுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குமளவிற்குத் திமுகவிற்குக் கல்வியின் மீது அப்படியென்ன காழ்ப்புணர்வு? முதல்முறை வாக்காளர்கள் எல்லாம் கற்றுத் தேர்ந்துவிட்டால், தங்களின் அரசியல் பிழைப்பு நாறிவிடும் என்ற பதற்றமா?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.