தமிழக செய்திகள்

மதுரைக்கு எய்ம்ஸ் வரக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலை செய்தார்; அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமானது என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்

திருப்பூர்,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதனை தொடர்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,

உதயநிதி ஸ்டாலின் வாழ்க்கையில் செய்தித்தாள் பார்க்கிறாரா? டிவி பார்க்கிறாரா? அவருடன் இருக்கும் செயலாளர்களிடம் கேட்கிறாரா? என்பது எனக்கு தெரியவில்லை. எந்த சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஊக்கத்தொகையை பாஜக நிறுத்தியுள்ளது?

தரவுகள் அடிப்படையில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியைவிட 12 ஆண்டுகள் பாஜக ஆட்சியில்தான் சிறுபான்மை மாணவர்களுக்கு அதிகப்படியான ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு ஒரு அரசாக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் பாஜக அரசு செய்துள்ளது. சிறுபான்மையினருக்கு என்ன நிறுத்தியுள்ளோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெளிவாக கூறினால் அதற்கு பதில் சொல்கிறேன்.

சிறுபான்மையினர் வாக்கு வங்கி திமுகவுக்கு வேண்டும் என்பதற்காக பாஜக மீது குற்றச்சாட்டை வைக்கிறார். 5 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்கு திமுக அரசு என்ன செய்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக உதயநிதி ஸ்டாலின் கொடுக்கட்டும்.

5 ஆண்டுகளாக சிறுபான்மையினர், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் என்று கூரை மீது நின்று முதல்-அமைச்சர் கத்துகிறார். 5 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்கு திமுக அரசு என்ன செய்துள்ளது? பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்திற்கும் என்ன செய்துள்ளீர்கள் என்பதை திமுக அரசு கூற வேண்டும். யாருக்கும் எதுவும் செய்யவில்லை. சிறுபான்மையினர் வாக்குக்காக பொய்யையும், புரளியையும் கிளப்பும் வேலையை உதயநிதி ஸ்டாலின் செய்கிறார்.

இந்தியாவில் அதிகப்படியான அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டிற்குதான் ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனை விரைவில் முழு பயன்பாட்டிற்கு வர உள்ளது.

தமிழ்நாட்டிற்கு பல ஆயிரம் கோடி செலவு செய்து எய்மஸ் மருத்துவமனை வர உள்ளது அதை நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்தாரா?

மதுரை தனி மண்டலமாக உள்ளதா? தமிழ்நாட்டில் முதல்-அமைச்சருக்கு கீழ் மதுரை வராதா? எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட வேலை நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை பார்வையிடலாமே?

5 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் எத்தனை முறை மதுரை சென்றுள்ளார்... எய்ம்ஸ் மருத்துவமனை பக்கம் சென்றுள்ளாரா?

மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை வரக்கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளாக வேலை செய்தார். திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமானது.

எய்ம்ஸ் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை தமிழக அரசு கொடுக்கவில்லை. மரங்களை வெட்ட ஒன்றரை ஆண்டுகள், நிலத்தை கையகப்படுத்த தாமதம், ஒவ்வொரு நடவடிக்கையையும் எவ்வளவு தாமதப்படுத்தமுடியுமோ அனைத்து நடவடிக்கையும் அங்குள்ள பஞ்சாயத்து உள்பட அனைத்து துறைகளையும் வைத்து திமுக அரசு வேலை பார்த்தது. அதையெல்லாம் தாண்டி தற்போது எம்ய்ஸ் வந்துள்ளது.

திமுக அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்காமல் மத்திய பாஜக அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளோம்

குற்றஞ்சாட்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்று எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டு வந்து குற்றஞ்சாட்ட வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

என்றார்.