தமிழக செய்திகள்

137 சாலைப்பணிகளை முடக்கி வைத்திருக்கிறது திமுக அரசு - கோவில்பட்டியில் அண்ணாமலை பிரசாரம்

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு மற்றும் விளாத்திகுளத்தில் ஆர்.சத்யா ஆகியோரை ஆதரித்து அண்ணாமலை பிரசார மோற்கொண்டார்.

கோவில்பட்டி,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் ஆர்.சத்யா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற தவறிய தீயசக்தி திமுகவை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற உறுதியோடு மக்களின் குரலாய் பயணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் கடம்பூர் ராஜு மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் ஆர்.சத்யா ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

கோவில்பட்டி பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 2012 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இரண்டாவது சீவலப்பேரி குடிநீர் திட்டத்தின் கீழ். ஒரு நாளைக்கு 9 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தற்போது குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்து வரும் கோவில்பட்டி நகரமன்ற தலைவரை திமுக தனது வேட்பாளராக அறிவித்திருப்பது வெட்கக்கேடு.

கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, ரூ.30 கோடி மதிப்பிலான கோவில்பட்டி நகராட்சி சிறப்பு சாலைகள் திட்டம் மற்றும் ரூ.12 கோடி மதிப்பிலான 137 சாலைப்பணிகளை அரசியல் காழ்புணர்ச்சியோடு முடக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. இதுமட்டுமல்ல, நமது சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தனது தொகுதி மக்களுக்காக கொண்டுவந்த, கோவில்பட்டி கால்நடை ஆராய்ச்சி மையம், கோவில்பட்டி அரசு செவிலியர் கல்லூரி, கயத்தாறு தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முடக்கி வைத்திருப்பது ஏன்? மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை முடக்கி கமிஷன் கேட்டு கொள்ளையடிக்க நினைக்கும் தீயசக்தி திமுகவை விரட்டியடிக்க வேண்டும்.

மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட, வளர்ச்சியடைந்த தமிழகம் மலர்ந்திட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் கடம்பூர் ராஜு மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் ஆர்.சத்யா ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வளரட்டும்! தமிழகம் மலரட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.