அவர் தனது பேட்டியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், எந்த அரசாக இருந்தாலும் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்வோடு பழிவாங்கும் விதத்தில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அதேவேளையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை எதிர்க்கவில்லை என்றும் அதற்கு உண்டான வழிகாட்டுதல்கள்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பழிவாங்கும் நோக்கோடு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு நெருக்கடி கொடுத்ததாலேயே அவர் தலைமறைவாக இருந்துகொண்டு முன்ஜாமீன் பெற்றதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது பற்றி பேசுகையில், இதற்கு முழு காரணம் அனுபவம் இல்லாத தி.மு.க. அரசும், அதிகாரிகளும்தான் காரணம் என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அலங்கார ஊர்திகளின் கருத்துரு மற்றும் படங்கள் குறித்து அவர்களுக்கு விரிவாக விளக்கி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்க வேண்டும் என்றும் இவர்கள் அனுபவம் இல்லாத காரணத்தினாலே அது நிராகரிக்கப்பட்டதாகவும், அதை மறைத்து அரசியல் ஆதாயம் தேட தேவையில்லாத காரணங்களை சொல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு? எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா சர்ச்சைகள், பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடா? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார்.