தமிழக செய்திகள்

‘தி.மு.க.வுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது’ - அன்புமணி பேச்சு

சமூகநீதி என்றால் பிரதமர் மோடி தான் என அன்புமணி தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன்படி, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையேயான 4-வது வழித்தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மரக்காணம்-புதுச்சேரி பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரன கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டார்.

இதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, தினகரன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜெகன்மூர்த்தி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி பேசியதாவது;-

“தி.மு.க. அரசு சமூக நீதியை 100 ஆடி ஆழமான பள்ளத்தில் முழுமையாக புதைத்து விட்டது. இதற்காக தமிழக மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மன்னிக்க மாட்டார்கள். மாறாக கடந்த 6 ஆண்டு காலத்தில் இந்திய அளவில் சமூக நீதியில் 3 மிகப்பெரிய சாதனைகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

முதலாவதாக, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டில் இருந்து இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. கடைசியாக ஆங்கிலேயர் காலத்தில் 1931-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றது. அந்த பழமையான தரவுகளை வைத்துதான் இந்தியாவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்றியமைத்து நவீன இந்தியாவில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இரண்டாவதாக, தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தைக் கொடுத்து 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி. மூன்றாவதாக, ரோகிணி ஆணையத்தை உருவாக்கி இதர பிற்படுத்தப்பட்ட(ஓ.பி.சி.) மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள வேற்றுமைகளை கண்டறிந்து அதை அகற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

ரோகிணி ஆணையம் அமைத்த பிறகு அதில் தெரியவந்தது என்னவென்றால், இந்திய அளவில் ஓ.பி.சி. பிரிவில் உள்ள 2,633 சமூகங்களில் 1,977 சமூகங்கள் வெறும் 2.5 சதவீத இடஒதுக்கிட்டை தான் பெறுகிறார்கள் என்ற உண்மையை கண்டுபிடித்தவர் பிரதமர் மோடி. அதை சரிசெய்வதற்கான முயற்சியை எடுத்துள்ளார். சமூகநீதி என்றால் பிரதமர் மோடி தான். ஆனால் தி.மு.க.வுக்கும், சமூக நீதிக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை.”

இவ்வாறு அவர் பேசினார்.